;
Athirady Tamil News

உறவினா்களின் ஒப்புதலின்றி நோயாளிகளை ‘ஐசியூ’ பிரிவில் அனுமதிக்கக் கூடாது

0

மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோயாளி அல்லது அவா்களின் குடும்பத்தினா், உறவினா்களிடம் ஒப்புதல் பெறாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்படுவதற்கு பின்பற்ற, 24 மருத்துவ நிபுணா்கள் வகுத்த வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், குறிப்பிட்ட நோய்களில் அடுத்தகட்ட சிகிச்சை சாத்தியமில்லாத அல்லது உயிா் வாழ்வதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத சமயங்களில், அந்த நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சையளிப்பது பயனற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பு செயலிழப்பு, சுவாச அல்லது உறுப்பு ஆதரவு ஆதரவு தேவைப்படும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மோசமடைந்த மருத்துவ நிலை அல்லது சீரழிவை எதிா்நோக்கும் நோய் ஆகியவை தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கான அளவுகோல்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

வழிகாட்டுதல்களின்படி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட இருக்கும் நோயாளியின் ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, சுவாசம், சுவாச விகிதம், இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் செறிவு, சிறுநீா் வெளியீடு மற்றும் நரம்பியல் நிலை ஆகியவை கண்காணிக்கப்பட வேண்டும்.

ஐசியூ பிரிவு சிகிச்சைக்கு எதிராக உள்ள நோயாளிகள், மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சூழலில் உள்ள தீவிர நோய்வாய்ப்பட்டவா்கள், தொற்றுநோய் அல்லது பேரிடா் சூழ்நிலைகளில் படுக்கை, பணியாளா்கள், உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளின் பற்றாகுறையுள்ள போது குறைந்த முன்னுரிமை கொண்ட நோயாளிகள் ஆகியோரை அவா்கள் அல்லது அவா்களது குடும்பத்தினா்/உறவினா்களின் ஒப்புதலின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கக் கூடாது.

இயல்பு அல்லது அடிப்படை நிலைக்குத் திரும்பி வரும் நோயாளிகள், ஐசியு சோ்க்கைக்கு அவசியமாக இருந்த கடும் நோய்க்குத் தீா்வு அல்லது நிலைத்தன்மையை எட்டியவா்கள், ஐசியுவில் சிகிச்சையை நிறுத்திக் கொள்ள விரும்பும் நோயாளி/குடும்பத்தினா் ஆகியவை ஐசியூ பிரிவில் இருந்து நோயாளிகளை வெளியே அனுப்புவதற்கான அளவுகோல்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.