;
Athirady Tamil News

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பம் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

0

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே – பிட்டுகல பிரதேசத்தில் வீடொன்றில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத ரீதியான போதனைகளை நடத்தும் அந்த குடும்பத்தின் தந்தையும் விஷம் குடித்து உயிரை மாய்த்துள்ளதுடன், அவரை பின்பற்றியவர்களில் இருவரும் உயிரை மாய்த்துள்ளனர்.

கொட்டாவ – மகும்புர பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்த 46 வயதுடைய ருவன் பிரசன்ன குணரத்ன கடந்த 28ஆம் திகதி விஷம் அருந்தி உயிரை மாய்த்துள்ளார்.

இறுதிச் சடங்கு
அவரது இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர்.

பொலன்னறுவை பிரதேசத்தில் வசித்த இக்குடும்பமானது சில மாதங்களுக்கு முன்னர் தமது சொத்துக்களை விற்றுவிட்டு வெளிநாடு செல்லும் நம்பிக்கையில் ஹோமாகமவிற்கு குடிபெயர்ந்துள்ளது.

இவர் அப்பகுதியில் தற்காலிக குடியிருப்புக்காக வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ருவன் பிரசன்ன குணரத்னவும் மத விரிவுரைகளை வழங்கியவர் என்பதுடன் அவரது விரிவுரைகள் அடங்கிய காணொளிகளும் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.

நிதி பிரச்சினை
எவ்வாறாயினும், இதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை, மேலும் நிதி பிரச்சினை இந்த சம்பவத்தை பாதித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த நபரின் சமய சொற்பொழிவுகளில் கலந்துகொண்ட ஒருவரின் சடலமும் மஹரகம ரயில் நிலைய வீதியிலுள்ள விடுதி ஒன்றில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரும் விஷம் குடித்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த இசுரு புதர வெலிவிட்டிகொட என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் குறித்த விடுதிக்கு வந்த அவர், மாலை ஆறு மணிக்கு மேல் செல்வதாக விடுதியில் கூறியுள்ளார். ஆனால் அவர் வெளியில் வராததால், அறையை சோதனை செய்தபோது படுக்கையில் கிடப்பதை பார்த்த அறை ஊழியர் ஒருவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

புலனாய்வு பிரிவு
அதற்கமைய, மஹரகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நுகேகொட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வந்து ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விஷம் குடித்து இறந்தவரின் இறுதி ஊர்வலத்தில் இந்த நபரும் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபரை பின்பற்றுபவர் எனவும் அவரது விரிவுரைகளில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்த இடத்தில் சயனைட் என சந்தேகிக்கப்படும் ஒரு பை, தண்ணீர் போத்தல் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளும் கண்டெடுக்கப்பட்டன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யக்கல – ரபல்வத்த பிரதேசத்தில் 21 வயதுடைய யுவதியும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துள்ளதாகவும் அவரும் 46 வயதான ருவான் பிரசன்ன குணரத்னவின் விரிவுரைக்கு செல்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.