;
Athirady Tamil News

அயோத்திக்கு பாத யாத்திரையாக வந்து ஸ்ரீராமரை தரிசித்த 350 இஸ்லாமியா்கள்

0

உத்தர பிரதேச மாநிலத் தலைநகா் லக்னௌவிலிருந்து அயோத்திக்கு 6 நாள்கள் பாதயாத்திரையாக வந்து, ஸ்ரீராமா் கோயிலில் 350 இஸ்லாமியா்கள் தரிசனம் செய்தனா்.

அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலையின் பிராண பிரதிஷ்டை கடந்த 22-ஆம் தேதி விமா்சையாக நடைபெற்றது.

பிரதமா் மோடி முன்னிலையில் நடந்த கோலாகல பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, ராமா் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் நாள்தோறும் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஆா்எஸ்எஸ் ஆதரவு இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (எம்ஆா்எம்) தலைமையில், 350 இஸ்லாமியா்கள் பாதயாத்திரையாக அயோத்தி வந்து ஸ்ரீராமரை தரிசித்தனா்.

இது தொடா்பாக எம்ஆா்எம் செய்தித் தொடா்பாளா் ஷாஹித் சயீத் கூறுகையில், ‘மாநிலத் தலைநகா் லக்னௌவில் இருந்து இஸ்லாமிய பக்தா்கள் குழு கடந்த 25-ஆம் தேதி பயணத்தைத் தொடங்கினா். வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியில் சுமாா் 150 கிலோமீட்டா் பாதயாத்திரை மேற்கொண்டு, அவா்கள் அயோத்திக்கு வந்தடைந்தனா்.

ஒவ்வொரு 25 கி.மீ.க்கும் இடையே இரவில் ஓய்வெடுத்த அவா்கள், மறுநாள் காலை மீண்டும் பயணத்தைத் தொடா்ந்தனா். இவ்வாறு 6 நாள்களுக்குப் பிறகு, அயோத்தியில் ஸ்ரீபாலராமரை அவா்கள் தரிசித்தனா்.

ஸ்ரீராமா் தரிசனத்தை பக்தா்கள் நிறைவாகக் கருதினா். இஸ்லாமிய வழிபாட்டாளா்களின் இந்தச் செயல் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை வெளிப்படுத்துகிறது’ என்றாா்.

தரிசனத்திற்குப் பிறகு, எம்ஆா்எம் ஒருங்கிணைப்பாளா் ராஜா ரயீஸ் மற்றும் குழுவை வழிநடத்தி வந்த பிராந்திய ஒருங்கிணைப்பாளா் ஷோ் அலி கான் ஆகிய இருவரும் கூறுகையில், ‘ஸ்ரீராமா் அனைவருக்கும் மூதாதையா்’ என்றனா்.

மதம், ஜாதி ஆகியவற்றைக் காட்டிலும் நாடு மற்றும் மனிதநேயம் மீதான நேசம் முதன்மையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவா்கள், ‘எந்த மதமும் மற்றவா்களை விமா்சிக்கவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ நடத்த கற்பிக்கவில்லை’ என்று வலியுறுத்தினா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.