;
Athirady Tamil News

பாக். தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் – இம்ரான் கான் கட்சி போர்க்கொடி

0

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தல் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இதில், முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள்தான் இந்தத் தோ்தலில் மிக அதிக தொகுதிகளைக் கைப்பற்றினா்.இதனால், சுயேச்சையாகப் போட்டியிட்ட பிடிஐ கட்சியினா் 90ம் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றனா்.

இந்த நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ்(பிஎம்எல்-என்) கட்சியுடனோ, பிபிபி கட்சியுடனோ இணைந்து ஆட்சியமைக்கப் போவதில்லை என்று இம்ரான் கான் கூறிவிட்டாா்.

அதையடுத்து, கூட்டணி அரசை அமைப்பதற்காக பிஎம்எல்-என்(75 இடங்களில் வெற்றி), பிபிபி(54 இடங்கள்), மற்றும் பிற கட்சிகளுக்கு இடையே 2 நாள்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. அதில் பாகிஸ்தானின் பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப்தான் பொறுப்பேற்கவிருக்கிறாா் என்று செவ்வாய்க்கிழமை (பிப்.13) நள்ளிரவு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்படசமாக செயல்பட்டதாக இம்ரான் கான் கட்சி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதனையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜா மற்றும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி குவாஸி பயஸ் இஸா ஆகிய இருவரும் தங்கள் பதவியை விட்டு விலக அக்கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டதாக ராவல்பிண்டி தேர்தல் ஆணையர் லியாகத் அலி சத்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதில், தோல்வி பெறும் நிலையிலிருந்த வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற தேர்தல ஆணையம் உதவியதாக கூறியிருந்தார். அந்த வகையில், ராவல்பிண்டியில் 13 வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தான் முழு பொறுப்பேற்பதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி ஆகிய இருவரும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ராவல்பிண்டி தேர்தல் ஆணையர் லியாகத் அலி சத்தா பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை மேற்கோள் காட்டியுள்ள இம்ரான் கானின் பிடிஐ கட்சி, தேர்தல் விதிமீறல் நடவடிக்கைகளால், 80க்கும் மேற்பட்ட இடங்களில் தங்களின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மறுபுறம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ்(பிஎம்எல்-என்) கட்சி, குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ராவல்பிண்டி முன்னாள் தேர்தல் ஆணையர் லியாகத் அலி சத்தா மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக விமர்சனம் செய்துள்ளது.

இந்நிலையில், மேற்கண்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உயர்மட்டக் குழுவை அமைத்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.