;
Athirady Tamil News

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் மீட்பு

0

இலங்கைக்குக் கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொண்டி கடல் வழியாக நாட்டுப் படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக மீமீசல் அருகே உள்ள இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா மூட்டைகளை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், குறித்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய எஸ்.பி பட்டினத்தைச் சேர்ந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சட்டவிரோத கடத்தல்
தமிழகம், இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, எஸ்.பி பட்டினம், தேவிபட்டினம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக இலங்கைக்குச் சட்டவிரோதமாக நாட்டு படகுகளில் கஞ்சா, கடல் அட்டை, சமையல் மஞ்சள், ஏலக்காய், கடல் குதிரை உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் (09) இரவு தொண்டியில் இருந்து நாட்டுப் படகில் கடல் வழியாக கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்த இருப்பதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் இராமநாதபுரம் மாவட்ட எல்லை ஓரம் உள்ள மீன் வியாபார நிறுவனம், இறால் பண்ணைகள் உள்ளிட்டவற்றைச் சோதனை செய்தனர்.

இதன்போது இறால் பண்ணை ஒன்றில் இலங்கைக்குக் கடத்துவதற்காகச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ எடை கொண்ட கஞ்சா மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் எஸ்.பி பட்டினத்தைச் சேர்ந்த சுல்தான் என்பவருக்குச் சொந்தமான இறால் பண்ணையிலிருந்து இந்தக் கஞ்சா மூட்டைகள் எடுக்கப்பட்டன என்றும், மூன்று பேர் கொண்ட குழு நேற்றுமுன்தினம் இரவு இதனை நாட்டுப் படகில் இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்றும் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.