;
Athirady Tamil News

ஜனாதிபதி ரணிலுக்கு பிறந்தநாள்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறந்தநாளை முன்னிட்டு இன்றுடன் தனது 75ஆவது வயதை கடந்துள்ளார்.

1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்த இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்ற முதல் ஜனாதிபதியாக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

47 வருட நாடாளுமன்ற பயணம்
1977ஆம் ஆண்டு பியகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் பிரவேசித்த ஜனாதிபதி, அதன் பின்னர் தொடர்ந்து 47 வருடங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

நாட்டில் 6 முறை பிரதமர் பதவியை வகித்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1993ம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி முதல் தடவையாக பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 2001ம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப்பட்டார். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ரணில் – மைத்திரி கூட்டணி வெற்றியீட்டியதை அடுத்து, மூன்றாவது தடவையாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, நான்காவது தடவையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

நல்லாட்சி காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழுப்பகர நிலைமையினால், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். எனினும், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும் 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வந்த பின்னணியில், ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை மற்றும் சர்வதேச விவகார ஆளுமை ஆகியவற்றினால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஆளுமை அவருக்கு உள்ளதாக பெரும்பாலானோர் கூறியிருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே, ரணில் விக்கிரமசிங்க 6வது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்றுமே இல்லாத தோல்வியை ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன சந்தித்திருந்தன.

தேர்தலின் ஊடாக ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை கூட ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், இலங்கையில் காணப்படுகின்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாக, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் கிடைத்தது.

இந்த ஒரு நாடாளுமன்ற ஆசனத்தின் ஊடாக, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்திலுள்ள 225 பேருக்கு மத்தியில் தனியொருவராக அமர்ந்து, தனது அரசியலை நடத்தி வந்தார்.

இவ்வாறு தனியொருவராக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த ரணில் விக்ரமசிங்க, இன்று இலங்கை ஜனாதிபதி என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.