;
Athirady Tamil News

தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

0

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்வுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதுக்கு தமிழகம் கடும் ஆட்சேபனை பதிவு செய்கிறது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEF) கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளது.

அமைச்சருக்கு கடிதம்
இந்த விவகாரத்தில் தமிழகத்தின் ஆட்சேபனைகள் கருத்தில் கொள்ளப்படவில்லையென்றால், தேவைப்படும் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது.

தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்ச நீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதையும் இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

இந்தப் பிரச்சினையில் எங்களது ஆட்சேபனைகளை ஏற்கெனவே தமிழக அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஒன்றிய சுற்றுச்சூழல், வனத் துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழக அரசின் சார்பில் எடுக்கப்படும். எனவே, வரும் 28-ம் தேதி அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில்,

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிடவும், எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும்,

சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர் – செயலருக்கும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.