;
Athirady Tamil News

பூமிக்கு வரப்போகும் இன்னொரு நிலவு..மகாபாரதத்துடன் இணைந்த அதிசயம் – சூப்பர் தகவல்!

0

பூமியை 53 நாட்கள் மட்டும் சுற்றிவர உள்ள குட்டி நிலவு குறித்து இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவு..
பூமியின் துணைக்கோளாக நிலவு மட்டுமே உள்ளது. ஆனால் ஒரு சில சிறு கோள்கள் அவ்வப்போது பூமியை சுற்றி வருவது வழக்கம். அந்த வகையில் 2024 PT5 என்று அழைக்கப்படும் குட்டி நிலவு பூமியை சுற்றிவர உள்ளது. இந்த நிலவு வெறும் 10 மீட்டர் விட்டம் மட்டுமே கொண்டுள்ளது.

வழக்கமான நிலவை விட 350,000 மடங்கு சிறியது, எனவே, வெறும் கண்ணால் காண முடியாது என இஸ்ரோவின் விண்வெளிப் பொருள்கள் கண்காணிப்பு குழு தலைவர் டாக்டர் அனில் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனில் குமார் கூறியதாவது, பூமியின் தற்காலிக குட்டி நிலவு, 53 நாட்களுக்கு நமது கிரகத்தைச் சுற்றி வரும்.பூமியின் நீள்வட்ட விசையிலிருந்து பிரிந்து நவம்பர் 25ம் தேதி சூரிய குடும்பத்தின் பரந்த பகுதிக்கு திரும்பும். செப்டம்பர் 29 முதல் இதன் பூமியை சுற்றும் பயணம் தொடங்குகிறது.

அமெரிக்க வானியல் சங்கத்தின் (RNAAS) ஆராய்ச்சிக் குறிப்புகளில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2024 PT5 இன் சுற்றுப்பாதை பண்புகள், அர்ஜுனா சிறுகோள் தொகுப்பில் இருந்து வரும் சிறுகோள்களின் பண்புகளை ஒத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் தகவல்
‘அர்ஜுனா’ என்பது சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்களின் ஒரு தனித்துவமான குழு. இந்த சிறுகோள் குழுவின் பெயர், 1991ல் சூட்டப்பட்டது. ஆஸ்திரேலியாவின் சைடிங் ஸ்பிரிங் ஆய்வகத்தில் வானியலாளர் ராபர்ட் எச். மெக்நாட் ‘1991 VG’ என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.

மகாபாரதத்தால் ஈர்க்கப்பட்ட அவர்தான், சிறு கோள்களின் கூட்டத்துக்கு அர்ஜுனா என்று பெயர் சூட்டியவர். அர்ஜுனன் தனது துணிச்சலுக்கும், இணையற்ற வில்வித்தை திறமைக்கும், ஞானத்திற்கும் பெயர் பெற்றவர். அர்ஜுனனின் வேகமான அம்புகளைப் போல சூரிய குடும்பத்தின் வழியாக சிறுகோள் வேகமாகச் செல்வதையும்,

அதன் கணிக்க முடியாத தன்மையையும் இந்தப் பெயர் பிரதிபலிக்கிறது. பூமியைச் சுற்றி குட்டி நிலவு தோன்றுவது இது முதல் முறை அல்ல என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதற்கு முன், 1997, 2013 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இதே போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன என்று தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.