அன்று வீடியோ செய்தி மூலம் கலங்கவைத்த இளவரசி கேட்: நோயை வென்று பணிக்குத் திரும்பினார்
தனக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாக அன்று வீடியோ செய்தி மூலம் கலங்கவைத்த இளவரசி கேட், நோயை வென்று மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.
கலங்கவைத்த இளவரசி கேட்
பிரித்தானிய இளவரசி கேட், ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
ஆனால், அதற்குப் பின் அவரைக் குறித்து எந்த செய்தியும் வெளியாகாததால், அவருக்கு என்ன ஆயிற்று என உண்மையாகவே அக்கறையுடன் ஒரு கூட்டமும், ஆர்வத்துடன் ஒரு கூட்டமும் யோசிக்கத் துவங்க, அவரைக் குறித்த வதந்திகள் பரவத்துவங்கின.
அவர் இறந்துவிட்டார், வில்லியமைப் பிரிந்துவிட்டார் என்றெல்லாம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், ஊடகங்கள் எழுதவும், கேலி பேசவும் செய்தன.
இந்நிலையில், மார்ச் மாதம் 22ஆம் திகதி, தனக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதாகவும், தான் அதற்கான சிகிச்சையிலிருப்பதாகவும் கேட் வீடியோ ஒன்றை வெளியிட பிரித்தானியா அதிர்ந்தது!
நோயை வென்று பணிக்குத் திரும்பினார் கேட்
சமீபத்தில் இளவரசி கேட், தன் கணவர் வில்லியம் மற்றும் பிள்ளைகளுடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில், தனது புற்றுநோய் சிகிச்சை முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் பணிக்குத் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார் கேட்.
இந்நிலையில், நேற்று இளவரசி கேட் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார் என்னும் செய்தி, அவரது ரசிகர்களையும் பிரித்தானிய மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்குப் பின், விண்ட்சர் மாளிகையில், நேற்று முன் தினம் முதன்முறையாக கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளார் கேட்.