;
Athirady Tamil News

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி – ஆளுநர் நா.வேதநாயகன்

0

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

யாழ். உயர்கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழா இன்று சனிக்கிழமை காலை (11.01.2025) வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் மற்றும் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

இங்கு உரையாற்றிய ஆளுநர், முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர்கல்விக்கான வாய்ப்பு இருந்ததாகவும் இன்று அந்த நிலைமை மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர்கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பு பரந்தளவில் கிடைப்பதாகவும் தெரிவித்த ஆளுநர் அதனைச் சரிவரப் பயன்படுத்தவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர்கல்வித் தெரிவு இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை என்றும் இவை தொடரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.