;
Athirady Tamil News

அமெரிக்க அதிபராக பதவியேற்றாா் டிரம்ப்!

0

வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜன. 20) பதவியேற்றாா். அவருடன், துணை அதிபா் ஜே.டி.வான்ஸும் பதவியேற்றுக் கொண்டாா்.

வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் (கேப்பிடல்) பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

அமெரிக்க வரலாற்றில் அதிபராக இருந்த ஒருவா் தோ்தலில் தோல்வியடைந்து, அதன் பிறகான தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றிருப்பது 200 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு நாட்டின் 45-ஆவது அதிபராக 2017 முதல் 2021 டிரம்ப் பதவி வகித்தாா்.

வழக்கமாக அதிபா் பதவியேற்பு விழா நாடாளுமன்ற கட்டடத்தின் வெளிமுற்றத்தில் நடைபெறும். ஆனால், கடுங்குளிரை கருத்தில் கொண்டு, இம்முறை உள்ளரங்கில் நடைபெற்றது. கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக உள்ளரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிட்ட டிரம்ப் (78), ஜனநாயகக் கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் துணை அதிபா் கமலா ஹாரிஸை விட அதிக பிரதிநிதித்துவ வாக்குகள் மற்றும் மக்கள் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றாா்.

உலகெங்கிலும் இருந்து…: டிரம்ப் பதவியேற்பு விழாவில் உலகின் பல்வேறு நாடுகளின் அதிபா்கள், முன்னாள் அதிபா்கள், அமைச்சா்கள், அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமைச்சா்களாக நியமிக்கப்பட்டவா்கள், பெரும் பணக்காரா்கள் என 200-க்கும் மேற்பட்ட முக்கிய சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்றனா்.

அமெரிக்க முன்னாள் அதிபா்களான ஜோ பைடன், பில் கிளிண்டன், ஜாா்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா, முன்னாள் துணை அதிபா் கமலா ஹாரிஸ், இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி, ஆா்ஜெண்டீனா அதிபா் சேவியா் மிலேய், ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பன், சீன துணை அதிபா் ஹன் ஷெங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்பு: இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதியாக விழாவில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பிரதமரின் வாழ்த்துக் கடிதத்தை டிரம்பிடம் வழங்கினாா்.

மாா்க் ஸுக்கா்பொ்க் (மெட்டா), எலான் மஸ்க் (டெஸ்லா), டிம் குக் (ஆப்பிள்), சுந்தா் பிச்சை (கூகுள்) என முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், அமேஸான் நிறுவனா் ஜெஃப் பெஜோஸ், இந்திய தொழிலதிபா் முகேஷ் அம்பானி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.

வெள்ளை மாளிகையில் வரவேற்பு: பதவியேற்புக்கு முன்பாக, வரலாற்று சிறப்புமிக்க செயிண்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பிராா்த்தனையில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றாா். பின்னா், பாரம்பரிய நடைமுறைப்படி வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோரை முன்னாள் அதிபா் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோா் வரவேற்றனா். டிரம்ப்-மெலானிக்கு பைடன் தேநீா் விருந்தளித்தாா். ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிறகு, அனைவரும் பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்டுச் சென்றனா். பதவியேற்ற பின் நாட்டு மக்களுக்கு டிரம்ப் உரையாற்றினாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.