;
Athirady Tamil News

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை குடியுரிமை ரத்து: டிரம்ப்

0

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், கையெழுத்திட்ட முக்கிய ஆவணங்களில் ஒன்றாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு புறப்புரிமை குடியுரிமை ரத்து செய்யப்படும் உத்தரவும் இடம்பெற்றுள்ளது.

அவரது முக்கிய கொள்கைகளில் முதன்மையானதாக இருப்பது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தன்னிச்சையாக குடியுரிமை கிடைக்கும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே.

அதன்படி, அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றதும், அமெரிக்காவுக்குத்தான் முன்னுரிமை என்ற கொள்கைகளை நிலைநாட்டும் வகையிலான பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து அவர் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

அதிபராக பதவியேற்று 8 மணி நேரத்துக்குள் அவர் பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டு அதிரடிக் காட்டியிருக்கிறார். அதில் ஒன்றாக இந்த ஆவணம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களுக்கு, அமெரிக்காவில் குழந்தை பிறந்தால், அதற்கு பிறப்புரிமை குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது முடிவுக்கு வந்துள்ளது.

இவர் இந்த உத்தரவில் கையெழுத்திட்டாலும், அமெரிக்காவில் பிறக்கும் எவர் ஒருவரும், அமெரிக்க குடியுரிமை பெற்றவராகிறார் என்பதை உறுதி செய்யும் 14வது சட்டப்பிரிவு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், இந்த கையெழுத்தின் மூலம், அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, தன்னிச்சையாகவே அமெரிக்க குடியுரிமை வழங்குவது மட்டும் முடிவுக்கு வந்துவிடவில்லை, மேலும், இந்த திட்டத்துக்கு மிக ஆழமான விதிமுறைகளும் வகுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அதாவது, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தன்னிச்சையாகவே குடியுரிமை வழங்குவதை தடை செய்யும் சட்ட மசோதாவில், ஒரு குழந்தை அமெரிக்காவில் பிறந்து, அக்குழந்தைக்கு குடியுரிமை வழங்குவதாக இருந்தால், ஒன்று, அந்தக் குழந்தையின் பெற்றோரின் யாரேனும் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது ஒருவர் அமெரிக்காவில் சட்ட அனுமதியுடன் நுழைந்து, நிரந்தரமாகத் தங்கியிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய அதிபராகியிருக்கும் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்திருக்கும் இந்த உத்தரவு, அமெரிக்காவின் 14வது சட்டத்திருத்தத்துக்கு எதிரானதாக இருக்கும். ஏற்கனவே இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதனை மீறும் வகையில், இந்த அறிவிப்பு இருக்கும் என்பதால், இதனை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்படும் என அந்நாட்டு சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.