;
Athirady Tamil News

ஆயுர்வேத பொருட்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிரடி உத்தரவு

0

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆயுர்வேத மருந்துகள் மற்றும் தயாரிப்புகள் ஒழுங்குமுறை சபையின் புதிய உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ராஜகிரிய ஆயுர்வேத தேசிய மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ‘ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறை சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஆயுர்வேத துறையில் தரமான மற்றும் உயர்தர பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை என பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன் உள்ளூர் மருத்துவ முறையை நன்கு மேம்படுத்தி, எதிர்கால இலக்குகளில் அந்த மருத்துவ முறை தொடர்பான தனித்தன்மைகளை அடையாளம் கண்டு அத் தனித்தன்மைகளை சுற்றுலா வணிகத்துடன் இணைத்து சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகவுள்ளது.

மேலும் மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை அமைப்புகளை ஒன்றிணைக்கும் போது சுற்றுலாப் பகுதிகளில் மனித மற்றும் பௌதீக வசதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறும் அரசாங்கம் கோருகின்றது” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் உட்பொருட்களை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் புதிய உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.