;
Athirady Tamil News

தமிழ் மக்கள் ஜனாதிபதி மாளிகையை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை

0

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகைக்கானது அல்ல. அவர்களது அரசியல் உரிமை மற்றும் இருப்பிற்கான அடையாளங்களை பாதுகாப்பதாகவே இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக இணைப்பாளர் சிறீக்காந் பன்னீர்ச்செல்லவம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வடமராட்சியில் நடைற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது

கடந்தகால அரசுகளை மோசடிகாரர் என்ற போர்வையில் குற்றம் சாட்டியதுடன், தான் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியை மக்களிடம் கேட்டு மக்களின் உணர்வுகளுக்கேற்ப பொதுத் தேவைக்கு அதை கையளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் குறித்த விடயம் தமிழ் மக்களின் முதன்மையான அபிலாசையாகவோ தேவையாகவோ இருக்கவில்லை.

மாறாக அந்த மேடையில் தையிட்டி விகாரை வேண்டுமா வேண்டாமா, அல்லது பயங்கரவாதச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது, காணி நிலங்களை விடுவிப்பது, அரசியல் உரிமை, மாகாணசபை தேர்தல் போன்றவற்றுக்கு தீர்வுகள் வேண்டுமா வேண்டாமா உள்ளிட்ட கேள்விகளை மக்களிடம் முன்வைத்து மக்களின் உணர்வுகளை தெரிந்து கொண்டிருக வேண்டும்.

இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றுக்கு தீர்வு கொடுக்க முன்வருவார் என்றே நாமும் எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை.

மாறாக தனது ஆட்சியில் உள்ள குறைபாடுகளை மறைக்க யாழ்ப்பாணம் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வடக்கின் ஒட்டுமொத்த அதிகாரிகளையும் இயலாதவர்கள் என்ற போர்வையில் சித்தரிக்க முற்பட்டிருந்தார்.

இந்த போக்கும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகவே பார்க்க முடிகின்றது என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.