;
Athirady Tamil News

கனடிய கார்களுக்கு 100 சதவிகிதம் வரி… ட்ரம்பின் அடுத்த மிரட்டல்

0

எஃகு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்காவின் 25 சதவிகித வரிகளை எதிர்கொள்ள கனடா தயாராகி வரும் நிலையில், கனடாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் மீது கூடுதல் வரியை விதிக்க பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

100 சதவிகிதம் வரி
கனடிய கார்கள் மீது 50 முதல் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க செய்தி ஊடகம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட நேர்காணலின் போதே கனடிய கார்கள் தொடர்பில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

கனடா அமெரிக்காவிடமிருந்து ஆட்டோமொபைல் துறையைத் திருடியது என குற்றஞ்சாட்டியுள்ள ட்ரம்ப், அமெரிக்க மக்கள் தூக்கத்தில் இருந்த போது கனடா ஆட்டோமொபைல் துறையைத் திருடிவிட்டது என்றார்.

கனடாவுடன் ஒப்பந்தம் அமையாவிட்டால், கார்களுக்கு பெரிய வரி விதிக்க நேரிடும். அவர்களின் கார்களை அமெரிக்கா விரும்பவில்லை என்பதால் 50 அல்லது 100 சதவிகித வரி விதிப்பை கனடா எதிர்கொள்ளலாம் என்றார்.

1960களில் இருந்தே அமெரிக்காவுக்கான கார்களை கனடா தயாரித்து வருகிறது. 1965 ஆம் ஆண்டில், முன்னாள் பிரதமர் லெஸ்டர் பி. பியர்சனும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சனும் கனடா-அமெரிக்க ஆட்டோமொபைல் தயாரிப்புகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மூடுவதற்கு வழிவகுக்கும்
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான கார்கள் மற்றும் கார் பாகங்கள் மீதான வரிகள் நீக்கப்பட்டது. இந்த ஒப்பந்தமானது 1994 வரையில் அமுலில் இருந்தது.

ஆனால் அதன் பின்னர் NAFTA ஒப்பந்தம் அமுலுக்கு வரவும், கார் உற்பத்திக்கு மட்டுமல்லாமல், அனைத்து துறைகளுக்கும் தடையற்ற வர்த்தகம் விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து 2018ல் CUSMA ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததுடன், 2026ல் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில், கனேடிய தயாரிப்பு கார்கள் மீது கொள்ளை வரி விதிக்கப்படும் என்றால் அது முழு வட அமெரிக்க ஆட்டோமொபைல் துறையையும் மூடுவதற்கு வழிவகுக்கும் என துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.