;
Athirady Tamil News

35 ஆடம்பர கார்களில் சென்ற 12-ம் வகுப்பு மாணவர்கள்: பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு!

0

பள்ளி ஆண்டு விழாவுக்கு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 35 ஆடம்பர கார்களில் சென்றதைத் தொடர்ந்து பெற்றோர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் அமைந்துள்ள ஃபவுண்டெயின்ஹெட் தனியார் பள்ளியின் ஆண்டுவிழா கடந்த வாரம் நடைபெற்றது. அந்தப் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பிஎம்டபிள்யூ, மசேரட்டி, மெர்சிடஸ், போர்ஷே போன்ற விலையுயர்ந்த 35 ஆடம்பர கார்களில் ஆண்டு விழாவுக்குச் சென்றனர்.

இவற்றை சூரத் நகர சாலையில் அவர்கள் ஓட்டிச்செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் பல மாணவர்கள் புகை துப்பாக்கிகளைக் கையில் வைத்து ஆபத்தான முறையில் கார் கதவுகளிலும், காரின் சன் ரூஃபில் தலையை வெளியே நீட்டிக் கூச்சலிட்டபடி காரில் சாகம் செய்துகொண்டே சென்றனர்.

இந்தக் காணொளியைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களில் வரக்கூடாது என மாணவர்களை முன்னரே எச்சரித்ததாக பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காணொளி வைரலானதால் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய மாணவர்களின் பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய சூரத் காவல்துறை துணை ஆணையர் ஆர்பி பாரோட், “நாங்கள் 35 கார்களில் 26 கார்களை அடையாளம் கண்டுள்ளோம். அதில், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கார் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அந்தக் காணொளியில் உரிமம் இல்லாத 3 மாணவர்கள் கார் ஓட்டியதும், மற்றவர்கள் ஓட்டுநர் வைத்து காரில் வந்ததும் தெரிய வந்துள்ளது.

அந்த 3 மாணவர்களின் பெற்றொர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபத்தை ஏற்படுத்தும்படி கார் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.