கல்முனையில் விரட்டியடிக்கப்பட்ட சுமந்திரன், சாணக்கியன்!

இன்று( 16)கல்முனை பெரிய நீலாவணையில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபானசாலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் திடீரென வந்து கலந்து கொள்ள முற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டோர் போராட்டக்காரர்களின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கல்முனை தொகுதியின் தமிழரசுக்கட்சி செயலாளர் உள்ளிட்ட ஆதரவாளர்களே சுமந்திரன் சாணக்கியன் உள்ளிட்டோரை வெளியேறுமாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் போது வெளியேற்றப்பட்ட சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்ட குழுவினரை நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்றைய தினமும் போராட்டம் இடம் பெற்ற போது சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர். இதன் போது அப்பகுதியில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரும்பிச்சென்றுள்ளதுடன், பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.