யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (06.03.2025) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனவும் இளம் விவசாயிகளை பிரதேச மற்றும் மாவட்ட குழுக்கூட்டத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம் இளைய சமுதாயத்தை நவீன விவசாயத்தை நோக்கி உள்ளீர்க்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் பயன்படுத்தப்படாமல் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிப்பின் அவர்களின் பயன்படுத்தப்படாத விவசாய நிலங்கள் ஆகியவற்றை தற்காலிகமாக விவசாயத்தேவைகளுக்கு பயன்படுத்த சரியான பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதனூடாக விவசாய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தாா். மேலும் கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட
திட்டங்களின் முன்னேற்றம், பிரதேச செயலகங்கங்களின் கலந்துரையாடலில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்,
தற்போது அதிகரித்து வரும் தென்னை மரத்தை பாதிக்கும் வெண் ஈ தாக்கம் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்கள் குறித்து மக்களுக்கு சரியான விழிப்புணர்வு மேற்கொள்ளுமாறும் தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அதுமட்டுமன்றி மாவட்டத்தில் புதிதாக பன்றி வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு பிரதேச சபை , சுகாதார வைத்திய அதிகாரி , மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் சிபார்சு வழங்கப்பட்டதன் பின்னர் அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாவும் வீதி அபிவிருத்திஅதிகாரசபை ,வீதி அபிவிருத்தி திணைக்களம் , உள்ளூராட்சி அமைப்புக்கள் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளும் போதும் மதகுகள், பாலங்கள் அமைக்கப்படவேண்டிய சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்ட அந்தந்த திணைக்களங்களுடன் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்குமாறும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ,மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாகாண விவசாயப்பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி உதவிஆணையாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்,கூட்டுறவு உதவி ஆணையாளர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வங்கி மற்றும் காப்புறுதி சேவை பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.