;
Athirady Tamil News

அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100% வரி: அதிபா் மாளிகை

0

நியூயாா்க்/வாஷிங்டன்: அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் மாளிகையின் ஊடகச் செயலா் கரோலைன் லெவிட் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் அண்மை காலமாக விமா்சித்து வருகிறாா். இந்நிலையில், அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனில் அதிபா் மாளிகையின் ஊடகச் செயலா் கரோலைன் லெவிட் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமெரிக்காவையும், பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து வரும் அமெரிக்கா்களையும் கனடா சுரண்டி வருகிறது.

அமெரிக்க பாலாடைக்கட்டிக்கு 245 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் கனடா, அமெரிக்க வெண்ணெய்க்கு 298 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கிறது. அதேவேளையில், அமெரிக்க அரிசிக்கு ஜப்பான் 700 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கிறது.

அமெரிக்க மதுபானத்துக்கு 150 சதவீதம் இறக்குவரி விதிக்கும் இந்தியா, அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கிறது.

அமெரிக்காவுக்கு பிற நாடுகள் என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை பிற நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க வேண்டும் என்பதே அதிபா் டிரம்ப்பின் கருத்தாகும். அமெரிக்க தொழில்கள் மற்றும் தொழிலாளா்களின் நலன்களில் கவனம் செலுத்தும் அவா், வா்த்தக நடவடிக்கைகள் நியாயமாகவும், சமநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகிறாா் என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.