உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் – பெறுபேறுகளைத் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் அலுவலர்களுக்கான முன்னாயத்த கலந்துரையாடல்
பெறுபேறுகளைத் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் கடமைகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (04.05.2025) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் ,
எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 517 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெற்று 243 வட்டாரங்களில் வாக்கெண்ணல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வட்டாரங்களிலேயே வேட்பாளர் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாகவும், பெறுபேறுகளைத் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் தொடர்பான செயற்பாடுகள் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கு 28 உதவித் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் கடமைக்காக ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், கணினி மூலம் தயார்படுத்தல் செயற்பாடுகளுக்கான ஒழுங்ககளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தெரிவத்தாட்சி அலுவலர் அலுவலகம் நாளை (05.05.2025)காலை 9.00. மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இயங்கும் என்றும் அதற்குப் பின்னர் மாவட்ட செயலக கேட்போா் கூடத்திற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்தாா்.
பெறுபேறுகளைத் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் தொடர்பான செயற்பாடுகளில்
ஒன்றிணைந்து செயற்பட்டு நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற சிறப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டதுடன், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் சுதந்தரமாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு தமது நன்றியினையும்தெரிவித்துக் கொண்டார்.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பாக, பொறுப்பாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான பெறுபேறுகளைத் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் தொடர்பான
அறிவுறுத்தல்கள் மற்றும் கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பொ. தயானந்தன் அவர்களும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களும் பெறுபேறுகளைத் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடவுள்ள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.







