;
Athirady Tamil News

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

0

காஸாவின் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று முன்தினம் (மே 15) நள்ளிரவு துவங்கிய இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்கள் நேற்றும் (மே 16) தொடர்ந்து நடைபெற்றன.

இந்தத் தாக்குதல்களில், பலியானோரது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 93 ஆக உயர்ந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் மேற்கொண்ட அரசு முறைப் பயணங்கள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, இஸ்ரேல் அரசு கூறுகையில், காஸாவிலுள்ள கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சுமார் 150 பகுதிகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதன்மூலம் அங்கிருந்த ஏராளமான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் பெயிட் லஹியா நகரத்தில் நேற்று (மே 16) பல மணி நேரமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வெளியான விடியோக்களில், தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் கரும்புகைகள் பரவியுள்ளதும், அங்குள்ள மக்கள் தங்களது உடைமைகளுடன் நடந்தும், வாகனங்கள் மற்றும் கழுதை வண்டிகள் மூலமாகவும் அங்கிருந்து இடம்பெயர்வது பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாற்றத்தை ஏற்படுத்தாத டிரம்ப்பின் பயணம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரசு முறைப் பயணம், காஸா – இஸ்ரேல் இடையில் போர் நிறுத்தம் கொண்டு வரும் எனவும் காஸாவுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் முடக்கப்படாமல் செல்ல வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இஸ்ரேல் காஸாவின் மீதான தனது தாக்குதலை அதிகரித்துள்ளதினால், அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியதாக இணையவாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

முன்னதாக, மூன்று மாதங்களுக்கும் மேலாக காஸாவினுள் மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேல் ராணுவம் தடை விதித்துள்ளது. இதனால், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை உதவிகள் கிடைக்காமல் லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் தவித்து வருகின்றனர்.

இத்துடன், காஸா பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் கிளர்ச்சிப்படையினரை முற்றிலும் அழிப்பதற்காக அந்நகரத்தின் மீதான தங்களது தாக்குதல்களை மேலும் அதிகரிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் காஸவின் மீதான இஸ்ரேலின் போரில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 53,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும், போரின் துவக்கத்தில் ஹமாஸ் படையினர் சிறைப்பிடித்த 250 இஸ்ரேலியப் பிணைக் கைதிகளில், 58 பேர் தற்போது வரை அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.