உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு!
வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, ஆறு துறைகளில் சாதித்த மாணவர்களும் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர். இந்த கௌரவிப்பு நிகழ்வானது தொண்டைமானாறு தேசிய வெளிக்கள நிலையத்தின் ஏற்பாட்டில் அவர்களது அலுவலகத்தில் நடைபெற்றது.
விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள், நினைவுப் பரிசில்கள் வழங்கல், பணப்பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்று செயலாளரின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
இதில் பிரதம விருந்தினராக ப.விக்கினேஷ்வரனும் (முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர்), ஏனைய விருந்தினர்களாக கலாநிதி பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் (பீடாதிபதி – விஞ்ஞானத்துறை – யாழ்ப்பாண பல்கலைக்கழகம், போசகர் – தொண்டைமானாறு வெளிக்கள நிலையம்) கலாநிதி நாமகள் கிருஷ்ணபிள்ளை (தலைவர் – தொண்டைமானாறு வெளிக்கள நிலையம், விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் – யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


