;
Athirady Tamil News

உலகின் உயரமான செனாப் பாலத்தை திறந்துவைத்தார் மோடி!

0

ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு – காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ரயில்வே கட்டுமானங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

கத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மோடி, ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்துவைத்தார். தொடர்ந்து், நாட்டின் முதலாவது கம்பி வட அன்ஜி ரயில் பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதனைத் தொடர்ந்து, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளதால், ராணுவம், துணை ராணுவம், காவல்துறை, உளவுத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

ஜம்மு – ஸ்ரீநகர் வழித்தடத்தின் சிறப்புகள்

காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் 272 கி.மீ. தொலைவு கொண்ட உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கடந்த 1997-இல் தொடங்கப்பட்டது. இதில் 209 கி.மீ. தொலைவு வழித்தடம் பல்வேறு கட்டங்களாக திறக்கப்பட்டது.

இறுதியாக, சங்கல்தன்-ரியாசி இடையிலான 46 கி.மீ. வழித்தடம் கடந்த ஆண்டு ஜூனிலும், ரியாசி-கத்ரா இடையிலான 17 கி.மீ. வழித்தடம் கடந்த ஆண்டு டிசம்பரிலும் நிறைவடைந்தது.

ரூ.43,780 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் 36 சுரங்கங்களும் (119 கி.மீ. தொலைவு), 943 பாலங்களும் அமைந்துள்ளன. இதில் 12.77 கி.மீ. தொலைவுள்ள டி-50 சுரங்கம், நாட்டிலேயே மிகப் பெரிய ரயில் சுரங்கம் என்ற சிறப்புக்குரியதாகும்.

இந்த வழித்தடத்தில் நாட்டின் நவீன பொறியியல் அதிசயங்களாக விளங்கும் செனாப் பாலம் (உலகின் உயரமான ரயில் பாலம்), அன்ஜி பாலம் ( நாட்டின் முதலாவது கம்பி வட ரயில் பாலம்) ஆகியவை உள்ளது.

உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட நீளம்: 272 கி.மீ.

திட்ட மதிப்பு: ரூ.43,780 கோடி

சுரங்கங்கள்: 36 (119 கி.மீ. )

பாலங்கள்: 943

செனாப் பாலம்: 359 மீட்டா் உயரம், 1,315 மீட்டா் நீளம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.