;
Athirady Tamil News

சூட்கேஸில் பெண் சடலம் வழக்கு: 48 மணி நேரத்தில் குற்றவாளி கைது

0

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பட்டப்பகலில் அனாதையாய் கிடந்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 48 மணி நேரத்தில் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் பாலாநகர் அருகே உள்ள பூச்சுபல்லி எனும் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் அனாதையாய் ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வந்ததால், பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், பாலாநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அந்த சூட்கேஸில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாலாப்பூர் உதவி போலீஸ் ஆய்வாளர் சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் போலீஸ் குழுக்கள் ஏற்பாடு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இவ்வழக்கு தொடர்பாக குற்றவாளியை வெறும் 48 மணி நேரத்தில் பாலாப்பூர் போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேபாளத்தை சேர்ந்த தாரா பெஹாரா (33) எனும் பெண்மணியும், அதே நாட்டை சேர்ந்த விஜய் தோஃபா (30) என்கிற ஆணும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கமாகி, காதலித்து வந்தனர். இதில் தாரா பெஹாராவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இருப்பினும், அவர்கள் இருவரும் நேபாளத்தை விட்டு வெளியேறி ஹைதராபாத்தில் குடிபுகுந்தனர்.

இந்நிலையில், தாரா பெஹாரா கர்ப்பமானார். ஆனால், தனக்கு குழந்தை வேண்டாம் எனவும், கருக்கலைப்பு செய்து கொள்ள போகிறேன் எனவும் கூறியுள்ளார். இதற்கு விஜய் தோஃபா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் தாராவை, விஜய் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், கட்பல்லி பகுதியில் பெரிய சூட்கேஸ் வாங்கி வந்து, அதில் தாராவின் சடலத்தை வைத்து பூச்சுபல்லியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் வைத்து விட்டு விஜய் தோஃபா அங்கிருந்து நழுவிவிட்டார். இதெல்லாம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், போலீஸார் இவ்வழக்கின் குற்றவாளியை 48 மணி நேரத்தில் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இவ்வாறு சுரேஷ் குமார் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.