பக்ரீத் அன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 34 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் நேற்று (சனிக்கிழமை) நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் போர் தீவிரமடைந்து வருகிறது.
காஸாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர். ஐ.நா. அமைப்பு காஸாவில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி வரும் நிலையில், உணவைத் தேடிச் செல்லும் மக்கள் மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை நாளான இன்றும் காஸா மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் நேற்றைய வான்வழித் தாக்குதலில் 34 பாலஸ்தீனியர்கள் இறந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை ரஃபா எல்லை அருகே அல்-அகாவா பகுதியில் உணவு மையத்தை நோக்கிச் சென்ற 8 பேர் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
ஈத் திருநாளையொட்டி பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தொழுகை மேற்கொண்டனர். இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமான மசூதி இருந்த பகுதிகளில் தொழுகை செய்தனர்.
நேற்று முன்தினம் காஸாவில் உணவு விநியோகிக்கும் இடத்தில் 33 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஸா மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தேவையான நாப்கின் உள்ளிட்டவை கிடைப்பதில்லை என ஐக்கிய நாடுகள் நிவாரண நிறுவனம் கூறியுள்ளது.