தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்! காதலரை ரகசிய திருமணம் செய்த சோனம்?

தேனிலவுஅழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த வழக்கில் கைதான சோனம், ரகசியமாக ராஜ் குஷ்வாஹாவை திருமணம் செய்திருக்கலாம் என்று ராஜா ரகுவன்ஷியின் அண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருந்தபோது, சோனம் – ராஜ் குஷ்வாஹாவின் ரகசிய திருமணம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து ராஜா ரகுவன்ஷியின் அண்ணன் விபின் கூறுகையில், மேகாலயா காவல்துறையினர், சோனத்தைக் கைது செய்தபோது, அவரிடமிருந்து இரண்டு தாலிச் செயின்களை பறிமுதல் செய்த தகவல் தற்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. அதில் ஒன்று, எங்களது சகோதரனுக்கு திருமணம் நடந்தபோது, அளித்தது. மற்றொன்று, கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்தபோது, சோனம், குஷ்வாஹாவை திருமணம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியிருக்கிறார்.
திருமணத்துக்கு முன்பு ஏற்பட்ட காதல் காரணமாக, கணவரைக் கொலை செய்ய திட்டமிட்ட சோனம், மேகாலயத்துக்கு கணவரை தேனிலவு அழைத்துச் சென்று கொலை செய்தார். இந்த வழக்கில் சோனம், ராஜ் குஷ்வாஹா உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜா ரகுவன்ஷி கொலைக்கு பின்னணியில் மூளையாக இருந்தது ராஜ் குஷ்வாஹா என்றும், இந்த கொலைத் திட்டம் இந்தூரில் திட்டமிடப்பட்டு, மேகாலயத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் கொலை செய்து, உடலை வீச சோனம் உதவி செய்ததாக கூலிப்படையினர் வாக்குமூலம் அளித்த தகவலும் வெளியாகியிருக்கிறது.
ராஜா ரகுவன்ஷி – சோனம் திருமணத்துக்கு முன்பே அதோவது பிப்ரவரி மாதமே கொலைத் திட்டம் உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், ஏற்கனவே போட்ட மூன்று திட்டங்கள் கொலையில் முடியாமல், நான்காவது திட்டம்தான் நிறைவேறியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதாவது சோனம் திருமணம் மே மாதம் நடைபெற்ற நிலையில், கொலைத் திட்டம் பிப்ரவரி மாதமே தீட்டப்பட்டிருந்ததும், ஒன்று, ஆற்றில் சோனம் அடித்துச் செல்லப்பட்டதாக நாடகமாடுவது அல்லது, ஒரு பெண்ணைக் கொன்று எரித்துவிட்டு சோனம் என நாடகமாடுவது என்ற திட்டங்களும் கொலைச் சதியில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், சோனம் சகோதரர் கோவிந்த் மீதும், ராஜா ரகுவன்ஷியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். முதலில், தனது தங்கையின் தவறுக்காக எங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்டார். இப்போது சோனத்தை நேரில் சந்தித்து, வழக்குரைஞர் வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் செய்வதாக இருந்தால், ஏன் எங்களிடம் வந்து உணர்வுப்பூர்வமாக பேசி மன்னிப்புக் கேட்பது போல நடிக்க வேண்டும். தொடர்ந்து நாங்கள் சோனத்தையும் அவர்களது குடும்பத்தையும் வெறுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.