;
Athirady Tamil News

பேச தெரியாமல் குரைக்கும் 8 வயது சிறுவன் – நாய்களுடன் மட்டுமே வளர்ந்ததால் வந்த வினை

0

8 வயது சிறுவன் நாய்களுடன் மட்டுமே வளர்ந்ததால், பேச்சு வராமல் குரைக்க மட்டுமே செய்கிறார்.

நாய்களுடன் வளர்க்கப்பட்ட சிறுவன்
தாய்லாந்தின் உத்தராடிட் மாகாணத்தில், 46 வயதான பெண் ஒருவர் தனது தேவைக்காக, அருகே உள்ள கோவில்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.

கஞ்சா பழக்கம் உடைய அவர், தனது சிறிய மர வீட்டில் தனது 23 வயது மூத்த மகன் மற்றும் 8 வயது இளைய மகன் மற்றும் 6 நாய்களுடன் வசித்து வந்துள்ளார்.

தனது இளைய மகனை அவர் மழலையர் பள்ளியில் சேர்க்கவில்லை. 1 ஆம் வகுப்பு சேர்க்கும் வயதில், வகுப்புகளில் சேர்ப்பதற்காக அவனது தாயார் அரசாங்க கல்வி உதவி நிதியாக சுமார் 400 பாட் (இந்திய மதிப்பில் ரூ.1,000) பெற்றுள்ளார்.

ஆனால், 2 ஆண்டுகளாக தனது மகனை அவர் பள்ளிக்கு அனுப்பவில்லை. உள்ளூர் பள்ளி முதல்வர் ஒருவர், அரசியல்வாதியும் ஆர்வலருமான பவீனா ஹொங்சகுலை என்பவரிடம் இது தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காவல்துறையினர் அவர்கள் வீட்டை சோதனையிட்டுள்ளனர். அப்போது சிறுவனின் தாயும், 23 வயது கஞ்சா பயன்படுத்தியிருந்தது தெரிய வந்துள்ளது.

குரைக்கும் சிறுவன்
இந்த குடும்பத்தின் நடத்தை காரணமாக அந்த 8 வயது சிறுவனுடன், அக்கம் பக்கத்தினர் யாரும் தங்கள் குழந்தைகளை பழக அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக அந்த சிறுவன், வீட்டில் இருந்த 6 நாய்களுடன் மட்டுமே வசித்து வந்துள்ளார்.

மேலும், அந்த சிறுவனுக்கு பேச்சு வரவில்லை. நாய்களுடன் மட்டுமே வளர்ந்ததால், நாய் போன்றே குரைப்பதன் மூலமே மற்றவர்களுடன் அந்த சிறுவனால் தொடர்பு கொள்ள முடிகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக சிறுவனின் தாய் மற்றும் சகோதரர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 8 வயது சிறுவன் இப்போது உள்ளூர் குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.