;
Athirady Tamil News

ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு

0

கிராஸ் (ஆஸ்திரியா): ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிராஸில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்தியவர் பின்னர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கிராஸ் நகரிலுள்ள “போர்க்’ உயர்நிலைப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10 மணிக்கு வந்த ஆர்த்துர் ஏ (21) என்பவர், தன்னிடம் இரு துப்பாக்கிளைக் கொண்டு இரு வகுப்புகளில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார். சுமார் 40 ரவுண்டுகள் அவர் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் 9 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானவர்கள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, கழிப்பறையில் ஆர்த்துர் சடலமாகக் கிடப்பதைக் கண்டறிந்தனர். அவர் அங்கு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் கூறினர்.

தாக்குதலின் நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.

ஆர்த்துரிடம் இருந்த துப்பாக்கி இரண்டும் சட்டபூர்வமாக வாங்கப்பட்டது என்று போலீஸார் கூறினர். அவர் தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்திருந்தாலும், அது தொடர்பான விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

சம்பவம் நடந்த பள்ளியின் முன்னாள் மாணவராக இருந்தாலும், ஆர்த்துர் தனது படிப்பை முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளியில் பிற மாணவர்கள் தன்னை அடக்குமுறைக்குள்ளாக்குவதாக அவர் குற்றஞ்சாட்டி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூட்டை ஆர்த்துர் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வகுப்புகளில் ஆர்த்துர் பயின்ற வகுப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைப் போலவே, ஆஸ்திரியாவிலும் துப்பாக்கி வைத்திருப்பது சில சூழல்களில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஆஸ்திரியாவில் 5 சரமாரி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.