;
Athirady Tamil News

ஈரான் ஒருபோதும் சரணடையாது: டிரம்ப்புக்கு கமேனி பதில்

0

இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரான் ஒருபோதும் சரணடையாது என அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலையிட்டால், சரி செய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் இடையே தொடர்ச்சியாக 6 வது நாளாக வான்வெளித் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாடுகளிலும் உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. இது குறித்து எந்தவித கருத்தையும் கமேனி தெரிவிக்காத நிலையில், அமெரிக்க அதிபரின் எச்சரிக்கைக்குப் பிறகு கமேனி சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தொடர்ச்சியாக கருத்துகளையும் நிலைப்பாட்டையும் தெரிவித்து வருகிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பயங்கரவாத சியோனிஸ்ட் ஆட்சிக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு கருணை காட்டமாட்டோம் எனக் குறிப்பிட்டார்.

ஈரான் மதகுரு கமேனி பதுங்கியுள்ள இடம் குறித்து தெரியும் என்றும், நிபந்தனையின்றி அவர் சரணடைய வேண்டும் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து கமேனி பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், ஈரான் ஒருபோதும் சரணடையாது. ஈரான் நாட்டை சரணடையச் சொல்வது சரியானதல்ல. ஈரான் எதற்காக சரணடைய வேண்டும்? எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் ஒருபோதும் சரணடையாது. இதுவே ஈரான் நாட்டின் பலம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.