;
Athirady Tamil News

நல்லூர் பிரதேச சபையின் திண்மக் கழிவகற்றல் நெருக்கடிக்கு தீர்வு: மாற்று இடத்தில் மையம் அமைக்க அனுமதி!

0

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நிலவிவரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக விரைவில் பிறிதொரு இடத்தில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச சபை அலுவலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மிக நீண்ட காலமாக செய்யப்பட்டுவந்த திண்மக் கழிவகற்றல் பொறிமுறைக்கு பொருத்தமான இடம் இல்லாத காரணத்தால் தற்போது சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

தற்சமயம் அதற்கான தீர்வாக மாற்றிடமொன்றுக்கு சுற்றுச்சூழல் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளரின் முயற்சியால் இதற்கான அனுமதி தற்போது கிடைக்கப்பட்டுள்ளது

இருந்தபோதும் அதற்கான அமைவிடத்தில் தற்போது வேலைகள் உள்ளதன் காரணமாக அது இன்னும் முடிவடைய வில்லை. திண்மக்கழிவகற்றல் தரம் பிரிக்கும் பகுதி தற்சமயம் இல்லாத காரணத்தால் மிகப்பெரிய சிரமத்துக்குள்ளாகியுள்ளோம்.

இந்த விடயத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. திண்மக் கழிவுகளை தரம் பிரித்து தரும் பட்சத்தில் அதனை அகற்றுவதற்கான வசதிகள் இலகுவாக இருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் கையிலுமே எமது பிரதேசத்தின் அழகாம் தூய்மையும் இருக்கிறது. பிரதேச சபைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

ஒரிரு வாரங்களாக பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். சில வாரங்களில் முழுமையான வினைத்திறனாக திண்மக் கழிவகற்றலை கொண்டு செல்வோம் என்பதை உறுதியுடன் கூறுகிறோம்.

காரைக்கால் பகுதி தற்போது திண்மக் கழிவகற்றலை தரம் பிரிக்கும் வேலையை செய்ய முடியாத பிரதேசமாக மாறியுள்ளது. அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றபடியால் தொடர்ச்சியாக அதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கான மாற்றிடமாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காரைமுனங்கு இந்து மயானத்துக்கு அருகில் திண்மக் கழிவகற்றல் இடமொன்றை அமைத்து எங்களுக்கு வர வேண்டிய நிதிப் பங்களிப்புடன் முழுமையான வேலை திட்டங்கள் நடக்கிறது. அந்த இடத்தில் அதனை திறம்பட செய்வோம் என எதிர்பார்க்கிறோம் – என்றார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.