;
Athirady Tamil News

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது

0

வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் வாழ முடியாது என்ற மனோ நிலை எமது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

மறுபுறத்தில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது.

முன்னர் 11 எம்.பிக்கள் இருந்தனர். இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது.

வடக்கை முன்னேற்றுவது பற்றி, விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவது பற்றி கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமையும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக காரணமாக அமைந்தது.

இந்நிலைமையை மாற்றியமைக்கவே நாம் வந்துள்ளோம். வடக்கு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்கள பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். அதனால்தான் பாதீட்டில்கூட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனவே, தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்;. மக்கள் கைவிட்டால்கூட, மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாம் செய்வோம் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.