நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது! – டிரம்ப் ஆதங்கம்

நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறி வருகிறார். ஆனால், பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியதில் மூன்றாம் நபரின் தலையீடு இல்லை என்று இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. அதேநேரத்தில் போரை நிறுத்தியதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பாகிஸ்தான் தரப்பு நன்றி தெரிவித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனிர் சமீபத்தில் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பாகிஸ்தான் அரசும், டிரம்ப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்திருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இடையே பதற்றத்தைத் தணிக்க உதவிய எனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது:
“காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் ருவாண்டா குடியரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வரும் போரில் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். இரு நாடுகளின் தலைவர்களும் திங்கள்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாஷிங்டன் வருகிறார்கள். இது ஆப்பிரிக்காவிற்கும், உலகிற்கும் ஒரு சிறந்த நாள்! இதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. செர்பியா – கொசோவோ, எகிப்து – எத்தியோப்பியா நாடுகளுக்கு இடையேயான அமைதியை ஏற்படுத்தியதற்கு எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.
மேலும் மத்திய கிழக்கில் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
ரஷியா – உக்ரைன், இஸ்ரேல் – ஈரான் உள்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, மக்களுக்குத் தெரியும் என்னுடைய பணி. எனக்கு அதுதான் முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், “நான் இதுவரை 4 அல்லது 5 முறை நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் எனக்கு தரமாட்டார்கள், தாராளவாதிகளுக்குத்தான் தருவார்கள்” என்று கூறியுள்ளார்