;
Athirady Tamil News

தேனிலவு கொலை: சோனத்திடம் ராஜா ரகுவன்ஷி தாய் எழுப்பும் 4 கேள்விகள்!

0

மேகாலய மாநிலத்துக்கு தேனிலவு கொண்டாட அழைத்துச் சென்று, கூலிப் படையினா் மூலம் கணவரை தீா்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான அவரது மனைவி சோனத்திடம், மகனை இழந்த தாய் உமா ரகுவன்ஷி நான்கு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

கொலைகளில் மிக கொடூரமானக் கொலைகள் கூட நிகழ்ந்துள்ளன. ஆனால், கணவரை தேனிலவு அழைத்துச் சென்று மனைவி கொலை செய்ததும், மே மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பிப்ரவரி மாதமே மணப்பெண், கொலைச் சதிக்கு திட்டமிட்டதும் நாட்டையே உலுக்கியிருக்கிறது.

இந்த நிலையில், ராஜா ரகுவன்ஷியின் தாய் உமா ரகுவன்ஷி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், என் மகன் ராஜாவை ஏன் கொலை செய்தார் என்று உண்மையைச் சொல்லும்வரை அவரை சிறையில்தான் வைத்திருக்க வேண்டும்.

ஏன் எனது மகனை அவர் கொலை செய்தார்? இந்த வழக்கில், சோனம், சோனத்தின் நண்பர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். என் மகன் செய்த தவறு என்ன? எந்தக் காரணத்துக்காக இந்த கொலை திட்டத்தை நடத்தினார்? என் மகனைக் கொன்றதற்கான காரணத்தை சோனத்தின் வாயிலிருந்து நான் தெரிந்துகொள்ளாதவரை எனக்கு அமைதி என்பதே கிடைக்காது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ராஜா ரகுவன்ஷியின் சகோதரர் சச்சின் கூறுகையில், எனது தம்பி மரணத்தில், சோனத்தின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அதுபோல, வெறும் முக்கோணக் காதல் மட்டுமே கொலைக்கான பின்னணியாக இருக்காது என்றும், காவல்துறை நம்புகிறது. பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.

மத்திய பிரதேசம், இந்தூரைச் சோ்ந்தவா் சோனம் (24). இவர்தான் கணவரைக் கொலை செய்த குற்றத்துக்காக கைதாகியிருக்கிறார். இவருக்கும், தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷிக்கும் (28) கடந்த மே 11-ஆம் தேதி இந்தூரில் வெகு சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது. சில நாள்களுக்குப் பின்னா், தேனிலவு கொண்டாடுவதற்காக புதுமண தம்பதி மேகாலயத்துக்கு வந்தனா். இது அனைத்தும் சோனத்தின் திட்டம்.

மேகாலயம் செல்ல வேண்டும் என்பது சோனத்தின் விருப்பம். அங்குதான் கொலை திட்டத்தை அரங்கேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. அதுபோலவே, இயற்கை எழில்மிக்க சிரபுஞ்சி அருகே உள்ள நொங்கிரியாட் கிராமத்தில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த அவா்கள், மே 23-ஆம் தேதி அறையை காலி செய்துவிட்டுப் புறப்பட்டனா். அதன் பிறகு இருவரும் மாயமானதாகக் கூறப்பட்டது. இது தொடா்பாக குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் மேகாலய காவல் துறையினா் தம்பதியை தேடி வந்தனா்.

தேடுதல் பணியில், நொங்கிரியாட் கிராமத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அருவிப் பள்ளத்தாக்கில் அழுகிய நிலையில் ராஜா ரகுவன்ஷியின் உடல் ஜூன் 2-ஆம் தேதி மீட்கப்பட்டது. ஆனால், சோனம் என்னவானார் என்று தெரியவில்லை.

முதலில், இது ஏதோ விபத்து என்று நினைத்திருந்தனர். ஆனால், ராஜாவின் உடல்கூறாய்வில் தலையில் கூா்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்ததால், அவா் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

அப்போதுதான் வழக்கு விசாரணை மாறியது. விசாரணை தீவிரமடைந்ததும், உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரில் காவல் துறையிடம் சோனம் சரணடைந்தாா். அப்போது, கணவரை தேனிலவுக்கு அழைத்துச் செல்லவில்லை, கொலை செய்யதான் அழைத்துச் சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது. அதுவும் கூலிப்படை வைத்து ராஜாவைக் கொலை செய்ததும், அதற்குக் காரணம் அவரது பொல்லாத காதல்தான் என்றும் இதுவரை நம்பப்படுகிறது.

கூலிப் படையினருடன், கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக சோனத்தின் காதலர் ராஜ் சிங் குஷ்வாஹாவும் (21) கைதானார்.

யார் இந்த காதலர்?

சோனம் குடும்பத்தினா் நடத்திவரும் தொழிற்சாலையில் கணக்காளராக இருந்தவர் ராஜ் சிங் குஷ்வாஹா. இவருக்கும் சோனத்துக்கும் காதல் வந்து அதனை சோனம் குடும்பத்தினா், ஏற்காமல், ராஜாவுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமணம் நிச்சயம் ஆனதுமே, மணமகனைத் தீர்த்துக் கட்ட சோனம் திட்டமிடத் தொடங்கியிருக்கிறார்.

21 வயது காதலனுடன் சோ்ந்து கூலிப் படை மூலம் கணவரை கொன்றதாக சோனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. மேலும், கூலிப்படையினரை ராஜாவைக் கொலை செய்து பள்ளத்தாக்கில் இருந்து தள்ளிவிட்டபோது, சோனம் அதற்கு உதவியதாகவும் கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.