;
Athirady Tamil News

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல்! டிரம்ப் நன்றி!

0

அமெரிக்க ராணுவத் தளத்தின் மீதான தாக்குதல் குறித்த முன்னறிவிப்புக்காக ஈரானுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதையடுத்து, கத்தாரில் அமெரிக்காவின் விமானப் படைத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், தாக்குதல் தொடர்பான ஈரானின் முன்னறிவுப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் (Truth Social) கூறியதாவது, ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அழித்ததற்கு, அவர்களும் அதிகாரபூர்வமாக பதிலளித்துள்ளனர். நாங்களும் அதனை எதிர்பார்த்தோம்; திறம்படவும் எதிர்கொண்டோம். அவர்கள் வீசிய 14 ஏவுகணைகளில் 13 ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டன.

ஒரு ஏவுகணை மட்டும் அச்சுறுத்தல் அற்ற திசையில் சென்றதால், அதனை மட்டும் விட்டுவிட்டோம். இந்தத் தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தாக்குதல் குறித்து, எங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்ததற்காக, ஈரானுக்கு நன்றி. முன்னறிவிப்பால்தான், எந்தவொரு உயிரும் இழக்கப்படவில்லை; யாருக்கும் காயமும் ஏற்படவில்லை.

இப்போதும்கூட, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஈரான் தொடர முடியும். இஸ்ரேலையும் அதனைச் செய்யவே நான் ஊக்குவிப்பேன். இந்தத் தாக்குதல் விவகாரத்தில் ஈரானின் கவனத்திற்காக நன்றி.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் திங்கள்கிழமை இரவில் தாக்குதல் நடத்தியது. கத்தார் மட்டுமின்றி, சிரியா நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஒரு ஏவுகணைத் தாக்குதலும், ஈராக் மீது ஒன்றும் ஈரான் நடத்தியுள்ளது.

ஈரானின் வான்வழித் தாக்குதலையடுத்து கத்தார், குவைத், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் வான்வழியை மூடியுள்ளன. மேலும், கத்தார் நாட்டில் பணிபுரியும் 7.45 லட்சம் இந்தியர்களையும் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானின் தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனமும், ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக் கோரிக்கையும் விடுத்துள்ளது. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.