;
Athirady Tamil News

அமெரிக்காவுக்கும் பதிலடி; ஈரான் அதிரடி! ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்!

0

கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

மத்திய வளைகுடாவில் உள்ள கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்க விமானப் படைத் தளமான அல்-உதெய்த் (Al Udeid) தளத்தை குறிவைத்து, ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் வீசிய 10 ஏவுகணைகளில் 7 முறியடிக்கப்பட்டாலும், 3 ஏவுகணைகள் மட்டும் இலக்கைத் தாக்கி விட்டன.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய அதே எண்ணிக்கையிலான குண்டுகளையே பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்தது. அமெரிக்கா மீதான தாக்குதலுக்கு ஆபரேஷன் பஷாரத் அல்ஃபாத் (Operation Basharat al-Fath) என்று ஈரான் பெயரிட்டுள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கையால், நட்பு மற்றும் சகோதர நாடான கத்தாருக்கோ அதன் மக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

தோஹாவுக்கு வெளியே பாலைவனத்தில் 24 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அமெரிக்காவின் மத்திய கட்டளை மையமான அல்-உதெய்த் விமானத் தளத்தில் சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். இருப்பினும், தாக்குதலுக்குள்ளான பகுதியானது, மக்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து வெகுதொலைவில்தான் இருப்பதாக கத்தார் கூறியது.

கத்தார் மட்டுமின்றி, சிரியா நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஒரு ஏவுகணைத் தாக்குதலும், ஈராக் மீது ஒன்றும் ஈரான் நடத்தியுள்ளது.

இதனிடையே, இந்தப் பதற்றமான சூழல் காரணமாக, மத்திய கிழக்கில் அதிகளவிலான ராணுவப் படையை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

ஈரானின் வான்வழித் தாக்குதலையடுத்து கத்தார், குவைத், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் வான்வழியை மூடியுள்ளன.

மேலும், கத்தார் நாட்டில் தமிழர்கள் உள்பட 7.45 லட்சம் இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்திய இந்தியத் தூதரகம், வீட்டிலேயே இருக்குமாறும் கத்தார் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, கத்தாருக்கு லெபனான் பிரதமர் நவாஸ் சலாம் விமானத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், ஈரானின் தாக்குதலையடுத்து, அவரது விமானம் பஹ்ரைனில் தரையிறக்கப்பட்டது.

ஈரானின் தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனமும், ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக் கோரிக்கையும் விடுத்துள்ளது.

பயங்கரவாதத்தை ஈரான் ஆதரிப்பதாகக் கூறி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கான தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.