;
Athirady Tamil News

உணவுக்காகக் காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி

0

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.

போருக்கு இடையிலும் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை வழங்கி வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்தது. தற்போது குறிப்பிட்ட அளவு உணவு, மருந்துகளை மட்டுமே இஸ்ரேல் அனுமதிக்கும் நிலையில் அது காஸா மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு பசியில் செத்துக்கொண்டிருக்கின்றனர்.

உணவு மையங்களை நோக்கிச் செல்லும் மக்களையும் இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகிறது. காஸாவில் உணவு, மருத்துவம் இன்றி மக்கள் தவித்து வருவதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

நேற்று அதிகாலை மத்திய காஸாவில் உணவுக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 25 பேர் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். தாக்குதலையடுத்து அங்கிருந்து பலரும் தப்பித்து ஓடியதாகவும் இது ஒரு படுகொலை எனவும் அந்த இடமே ரத்தமாக மாறிவிட்டதாகவும் அங்கிருந்த ஒருவர் கூறியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த 140-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அவ்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவ வசதி இல்லாமல் பலரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 62 பேருக்கு உடனடி மருத்துவம் தேவை என்ற நிலையில் அவர்கள் மத்திய காஸாவில் உள்ள மற்ற மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போரில் தற்போது வரை பாலஸ்தீனத்தில் 56,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.