சீனாவில் வாகனம் மோதி பள்ளிக் குழந்தைகள் படுகாயம்! மீண்டும் கார் தாக்குதலா?

சீனாவின் பெய்ஜிங் புறநகர் மாவட்டத்திலுள்ள, தொடக்கப் பள்ளியின் அருகில் குழந்தைகள் மீது ஒருவர் காரால் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெய்ஜிங் மாகாணத்தின் மியூன் மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளி அருகில், ஓட்டுநர் ஒருவர் பள்ளிக்குழந்தைகள் மீது தனது காரால் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் ஏராளமான குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, மியூன் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த வாகனத்தை தவறாக இயக்கியதால் இந்தச் சம்பவம் அரங்கேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலமாக சீனாவின் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் மக்கள் மற்றும் குழந்தைகள் மீதான கார் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தச் சம்பவமும் அப்படியொரு தாக்குதலாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, 2024-ம் ஆண்டு நவம்பரில் சுஹாய் நகரத்தில் மக்கள் மீது ஒருவர் நடத்திய கார் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். இதனால், இந்தக் குற்றங்களைத் தடுப்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை வழங்க வேண்டுமென அந்நாட்டு அதிபர் ஸி ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.