பாகிஸ்தான் சுற்றுலாத் தலத்தில் திடீர் வெள்ளம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி?
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள ஸ்வாட் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஸ்வாட் மாவட்டத்திலுள்ள நதியில் நேற்று(ஜூன் 27) திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அங்குள்ள பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கிய நிலையில், அப்பகுதியிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்தச் சுற்றுலாப் பயணிகள் குழுவிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, அப்பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பலியான 7 பேரது உடல்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மாயமான 11 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.