மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கொல்கத்தா கல்லூரி பாதுகாவலர் கைது
மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் இவரையும் சேர்த்து இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டக் கல்லூரியில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த மாணவா்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று கல்லூரி பாதுகாவலரும் கைதாகியிருக்கிறார்.
தனக்கு நோ்ந்த கொடூரம் குறித்து கஸ்பா பகுதி காவல் நிலையத்தில் மாணவி புகாா் அளித்துள்ளாா். இது தொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது: ஜூன் 25-ஆம் தேதி மாலையில், தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி கட்டடத்தின் தரைத்தளத்தில் மாணவா் சங்க அலுவலகம் அருகே உள்ள பாதுகாவலரின் அறையில் சம்பவம் நடந்துள்ளது.
கல்விப் படிவம் நிரப்ப வேண்டுமெனக் கூறி யாரோ சிலரால் வரவழைக்கப்பட்ட மாணவி, பின்னா், பாதுகாவலரின் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். அங்கு முன்னாள் சட்ட மாணவா் மற்றும் 2 மூத்த மாணவா்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். இரவு 10 மணிவரை மாணவியைத் துன்புறுத்தியுள்ளனா். அதன் பிறகு, கடுமையான காயங்களுடன் அங்கிருந்து மாணவி விடுவிக்கப்பட்டுள்ளாா்.
பாலியல் வன்கொடுமையை அவா்கள் கைப்பேசியில் விடியோ எடுத்ததாகவும், வெளியே சொன்னால் விடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளாா்.
இந்த சம்பவத்தில் மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மாணவா், அலிபூா் அமா்வு நீதிமன்றத்தில் குற்றப் பிரிவு வழக்குரைஞராக உள்ளதாகவும் காவல் துறையினா் கூறினா். சட்டக் கல்லூரியின் ஆசிரியா் அல்லாத ஊழியராக ஒப்பந்த அடிப்படையில் அவா் பணியாற்றி வந்ததாகக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பந்தப்பட்ட மாணவியை திருமணம் செய்ய முன்னாள் மாணவா் விருப்பம் தெரிவித்தாகவும், மாணவி மறுத்துவிட்டதால், அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு முன்பு, கல்லூரியின் மாணவர்கள் அணித் தலைவர் பதவியை வழங்குவதாக மாணவியிடம் கூறப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.