ஹைதராபாத்தில் தெலுங்கு பெண் பத்திரிகையாளர் சடலமாக மீட்பு
தெலங்கானாவில் பிரபல தெலுங்கு பெண் பத்திரிகையாளர் ஸ்வேசா அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, 35 வயதான அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஸ்வேசா தனது தாய் மற்றும் மகளுடன் சிக்கட்பள்ளியில் வசித்து வந்தார். ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவரது மகள் நேற்று மாலையில் பள்ளியிலிருந்து திரும்பியபோது, படுக்கையறை பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்.
பலமுறை தட்டியும் எந்த பதிலும் கிடைக்காததால், உடனே அவர் அண்டை வீட்டாருக்கு தகவல் கொடுத்தார். அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, அறைக்குள் ஸ்வேசா மயக்கமடைந்திருப்பதைக் கண்டனர். ஆனால் மருத்துவ உதவியாளர்கள் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
பிறகு உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இறப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் ஹைதராபாத் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.