நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!

சீனாவில் வானில் பறந்து கொண்டிருந்த உள்நாட்டு விமானம் ஒன்று நடுவழியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சீனாவின், ஷாண்டாங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான உள்நாட்டு விமானம் ஒன்று, நேற்று முன்தினம் (ஜூன் 27) கிங்டாவோவிலிருந்து ஷாங்காய் நகருக்கு பயணம் செய்து கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, நடுவழியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், அந்த விமானம் நாங்சிங் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென துர்நாற்றம் வீசியதுடன், விமானத்தில் அதிக சத்தம்கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், மற்றொரு பயணி கூறுகையில், விமானத்தின் இடதுபுற எஞ்சினில் ஏதோவொன்று இழுக்கப்பட்டு சிக்கி கொண்டதாகவும், அதையடுத்து சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்கு அது எரிவதைப் போன்று வாசனை உண்டானதாகவும் கூறியதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விமானத்தின் பயணிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டு, அவர்களது பயணத்தைத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.