ஈரான், ஜோர்டான், லெபனான், சிரியாவுக்கு மீண்டும் விமான சேவை: கத்தார்!

போர் நடைபெற்று வந்த ஈரானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி நேற்று முதல் (ஜூன் 30) விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவுக்கும் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில், ஜோர்டான், லெபனானுக்கு இன்று முதலும், சிரியாவுக்கு மட்டும் ஜூலை 6ஆம் தேதி முதலும் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த இரு வாரங்களாக போர் நடைபெற்று வந்த நிலையில், அதன் வான்வழித்தடம் மூடப்பட்டிருந்தது.
போரின் 12வது நாளில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் – ஈரான் இடையே தாக்குதல்கள் குறைந்தன.
இந்நிலையில், ஈரானுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி ஈரானில் உள்ள 5 இடங்களுக்கு நேற்று முதல் (ஜூன் 30) விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.