சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!

சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மேற்கு சிகாகோ அவென்யூவின் 300-வது பிளாக்கில் உள்ள ஆர்டிஸ் லவுஞ்ச் இரவு விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த இரவு விடுதியில் ராப்பர் மெல்லோ பக்ஸிற்கான ஆல்ப வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் இருந்து வெளியே வந்தவர்கள் மீது கருப்பு நிற காரில் வந்த சிலர், கண்மூடித்தனமாக சரமாரி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட நான்கு பேர் பலியானதாக போலீஸார் உறுதிப்படுத்தினர். அவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
காயமடைந்தவர்களில் இருவர் இல்லினாய்ஸ் மேசோனிக், 2 பேர் மவுண்ட் சினாய் மருத்துவமனைக்கும், 3 பேர் ஸ்ட்ரோகர் மருத்துவமனைக்கும், ஆறு பேர் நார்த்வெஸ்டர்ன் மெமோரியல் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.