பற்றி எரியும் இந்தோனேசியா… நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!
இந்தோனேசியா நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில், அங்குள்ள ஒரு மாகாணத்தின் உள்ளூர் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டதில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஒவ்வொரு மாதம் வழங்கப்படும் சம்பளத்துடன் கூடுதலாக, வீட்டு வசதிக்கென்று தனியாக 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளவிலான பணம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, விலைவாசி மற்றும் வரி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசிய மக்கள், அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிராக, தலைநகர் ஜகர்த்தாவில், கடந்த ஆக.25 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முன்பு உணவு டெலிவரி செய்யும் ஊழியராகப் பணியாற்றி வந்த அஃபான் குர்னியாவன் (வயது 21) எனும் இளைஞரின் மீது காவல் துறையின் கனரக வாகனத்தை ஏற்றி அவர் கொல்லப்படும் விடியோ இணையத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் அரசுக்கு எதிராகவும், இளைஞர் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் அரசின் காவல் உள்ளிட்ட படைகளுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், சௌத் சுலவேசி மாகாணத்தில் உள்ள மக்கஸர் நகரத்தில் இருந்த பிராந்திய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு, நேற்று முன்தினம் (ஆக.29) மாலை போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், தீயில் கருகி பலியான 3 பேரது உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
இத்துடன், தீயில் இருந்து உயிர்பிழைக்க கட்டடத்தில் இருந்து வெளியே குதித்த 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்நாட்டின் ஏராளமான முக்கிய அரசுக் கட்டடங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தெற்காசிய நாடுகளின் தூதரகங்கள் இந்தோனேசியாவில் வசிக்கும் தங்களது குடிமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.