;
Athirady Tamil News

காஸா நகரை ஆபத்தான போர் மண்டலமாக அறிவித்த இஸ்ரேல்… தயாராகும் இராணுவம்

0

காஸா நகரை ஆபத்தான போர் மண்டலமாக இஸ்ரேல் அறிவித்துள்ளதை அடுத்து, பாலஸ்தீனத்தின் மிகப்பெரிய நகரை கையகப்படுத்த இஸ்ரேல் இராணுவம் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபத்தான போர் மண்டலம்
வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 10 மணி முதல் இராணுவ நடவடிக்கைகளில் உள்ளூர் அழுத்தங்கள் எதுவும் காஸா நகரப் பகுதிக்குப் பொருந்தாது என்றும், காஸா நகரமானது ஆபத்தான போர் மண்டலமாக அறிவிக்கபப்டுவதாகவும் இஸ்ரேல் இராணுவம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்க அவ்வப்போது இராணுவ நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும். அப்படியான நடவடிக்கைகள் இனி அமுலுக்கு வராது என்றே இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

ஆனால், காஸா நகரம் தவிர்த்து எஞ்சிய பகுதிகளில் உதவிகள் முன்னெடுக்க அனுமதிக்கப்படும் என்றும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. புதன்கிழமையே அங்குள்ள மக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் வெளியேறும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இந்த நிலையில், காஸாவில் தனது இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தும் பெஞ்சமின் நெதன்யாகுவின் கொடுங்கோல் திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேரழிவை ஏற்படுத்தும்
செவ்வாய்க்கிழமை தேசிய நடவடிக்கை தினத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து, சாலைகளுக்கு தீ வைத்து, அமைச்சர்களின் வீடுகளுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மட்டுமின்றி, போரை நிறுத்தி, ஹமாஸ் படைகளால் இன்னும் பிடித்து வைக்கப்பட்டுள்ள 50 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

காஸா நகரத்தைக் கைப்பற்றும் இஸ்ரேல் இராணுவத்தின் திட்டம் பொதுமக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என மனித உரிமைகள் குழுக்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், எஞ்சியுள்ள ஹமாஸ் கோட்டைகளை குறிவைத்து நடத்தப்படும் விரிவாக்கப்பட்ட தாக்குதலை ஏற்க முடியாது என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.