;
Athirady Tamil News

கழிப்பறையில் புகைபிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!

0

மெக்ஸிகோவில் இருந்து லண்டன் சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் கழிப்பறையில் இளம் ஜோடி ஒன்று, வெளியே வராமல் தொடர்ந்து புகைபிடித்துக்கொண்டிருந்ததால், விமானப் பயணம் 17 மணி நேரம் தாமதமானது.

விமான ஊழியர்கள் மற்றும் விமானியின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாது அந்த இளம் ஜோடி கழிப்பறையில் இருந்து வெளியே வராததால், பாதியிலேயே விமானம் தரையிறக்கப்பட்டது. 17 மணி நேர போராட்டத்துக்குப் பிறகே விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் திட்டமிட்டபடி அழைத்துச்செல்லப்பட்டனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டியூஐ விமான நிறுவனம், ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்க நாடுகளுக்கு பயணச் சேவையை வழங்கி வருகிறது.

அந்தவகையில், மெக்ஸிகோவில் இருந்து நேற்று பயணிகளுடன் லண்டன் சென்றுக்கொண்டிருந்த விமானத்தில், இளம் ஜோடி ஒன்று கழிப்பறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என்றும், அவர்கள் தொடர்ந்து புகைபிடித்துக்கொண்டிருப்பதாகவும் விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதன் பிறகு, கழிப்பறையில் உள்ள இருவர் வெளியே வருமாறு விமானி அறிவுறுத்தியுள்ளார். ஆனால், மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த இளம் ஜோடி அறிவுறுத்தலைப் பொருட்படுத்தவில்லை.

மூன்று மணிநேரமாக பலமுறை அறிவுறுத்திய பிறகும் அவர்கள் வராததால், மெக்ஸிகோ எல்லையில் இருந்து வட அமெரிக்காவில் உள்ள மெய்ன் என்ற இடத்திற்கு விமானத்தை திருப்புவதாக விமானி அறிவித்துள்ளார். திட்டமிடப்படாத இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால், விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

17 மணி நேரத்துக்குப் பிறகு இரவு 9.30 மணியளவில் அந்த ஜோடி வெளியே வந்துள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பயணிகள், விரைவில் விமானத்தை இயக்க கோரிக்கை வைத்தனர். சக பயணிகளிடம் மன்னிப்பு கோரிய விமானி, பின்னர் விமானத்தை இயக்கிச் சென்றதாக லண்டனைச் சேர்ந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.