அதிக விலைக்கு குடிநீர் விற்ற சுற்றுலா விடுதிகளுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா ஹோட்டல்களுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் மொத்தம் 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்படி, ஒவ்வொரு ஹோட்டலுக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நேற்று புதன்கிழமை (13) இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
நுகர்வோரிடமிருந்து கிடைத்த புகார்களின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் மாத்தறை மாவட்ட அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இந்த மோசடி கண்டறியப்பட்டது.
குறித்த ஹோட்டல்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களை சுரண்டியுள்ளன.
1 லீற்றர் குடிநீர் போத்தலின் அரசாங்க விலை 100 ரூபாயாக இருக்கையில், அது 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதோடு, 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலின் அரசாங்க விலை 70 ரூபாயாக இருக்கையில், அது 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பொருட்களை வாங்குவதற்கு முன்னர் அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை மற்றும் காலாவதி திகதி ஆகியவற்றை எப்போதும் சரிபார்க்குமாறும், வாங்கிய பொருட்களுக்கான பற்றுச்சீட்டுகளை கோருமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக அறவிடும் வர்த்தகர்களுக்கு எதிராக 1977 என்ற அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.