இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்தம் ; 150 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த மழை
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று (15) மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையிலான மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
அத்தோடு காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.