;
Athirady Tamil News

அரசகாணி வேலை திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

0
அரசகாணி வேலை திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், வட மாகாண காணி ஆணையாளர்  ஆர்.குருபரன்  பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.05.2026) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டிய காணிச் செயற்பாடுகள், காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் காணிக் கச்சேரி மூலம் ஆவணங்கள் வழங்கப்பட வேண்டிய காணிகள், அரச காணியினை வர்த்தக நோக்குடன் கூடிய விவசாய நடவடிக்கைகளுக்காக நீண்ட கால குத்தகைக்கு வழங்கும் காணிகள், பிரதேச சபைக்கு ஆளுகைக்கு உட்பட்ட இதுவரை கையளிக்கப்படாத காணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அரச காணிகள் குறைவாக காணப்படுவதால் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக காணப்படுகின்றதாகவும் தெரிவித்தார். மேலும், மாகாண காணி திணைக்களத்தின் கீழ் பிரதேச செயலங்களில் கடமையாற்றும்
ஆளணியை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும், அதனை மீள் ஒழுங்கு செய்யுமாறு மாகாண காணி ஆணையாளர் அவர்களை கேட்டுக்கொண்டார். மேலும், தற்போது ஹிமிகம திட்டத்தின் மூலம் காணி ஆவணங்களை வழங்குவதனை விரைவுபடுத்துமாறும், பிரதேச ரீதியாக காணி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போது அதற்கான இறுதியான தீர்மானத்தை பிரதேச செயலாளர்கள் எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மேலும், மக்களின் தேவைகளை சரியான வகையில் காணி உத்தியோகத்தர்கள் அடையாளம் கண்டு பிரதேச செயலாளர்களுக்கு தெரியப்படுத்தி சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கு வழியை ஏற்படுத்துமாறும் தெரிவித்ததுடன், வினைத்திறனாக செயற்பட்டு மாவட்ட காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் பின்வரும் அறிவுறுத்தல்களும் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.

01.ஜூன் இறுதி வாரத்திற்குள் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தீர்வு காணப்பட வேண்டிய காணி தொடர்பான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி சம்பந்தப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து கலந்துரையாடி தீர்வு காண வேண்டும்.

02.ஜூன் 25 ஆம் திகதி மாவட்ட காணி பயன்பாட்டுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக பிரதேச காணி பயன்பாட்டுக்குழு கூட்டத்தை நடாத்தி எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவித்தார்.

03.டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக யாழ்ப்பாண மாவட்டத்தின் காணி தொடர்பான நடமாடும் சேவை ஒன்றினை மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடாத்த ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

04.பிரதேச செயலகங்களில் காணி அளவீடுகளை மேற்கொள்ள நில அளவைத் திணைக்களத்திடம் முனவைக்கும் போது முன்னுரிமை அடிப்படையில் நில அளவைத் திணைக்களம் காணி அளவீடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்  கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், நில அளவைகள் திணைக்கள அத்தியட்சகர் திரு.பிறேமதாஸ், வட மாகாண உதவி காணி ஆணையாளர் ரி.விதுஷா, பிரதேச செயலாளரகள், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக காணி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.