;
Athirady Tamil News

‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி

0

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடயை ‘பிரளய்’ ஏவுகணையின் இரு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று 150 கி.மீ. முதல் 500 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிரளய் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது திண்ம எரிபொருளுடன் தாழ்வான பகுதிகளில் இலக்குகளுக்கு ஏற்ப திசையை மாற்றி அதிவேகத்தில் பயணிக்கும் (குவாசி பலிஸ்டிக் ஏவுகணை) பலிஸ்டிக் ரக ஏவுகணையாகும். நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை மிகத் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் வலிமையுடையது. எனவே, எதிரிகள் இந்த ஏவுகணையை இடைமறித்து அழிப்பது மிகவும் கடினமானது.

இந்த ஏவுகணையின் இரு சோதனைகள் ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒடிஸா மாநில கடலோரம் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

பிரளய் ஏவுகணையின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச இயக்கத் திறனை மதிப்பிடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், இலக்குகளைத் துல்லியமாக தாக்குவது உள்பட அனைத்து அம்சங்களும் சிறப்பாக செயல்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்த டிஆா்டிஓ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த ஏவுகணையை இமாரத் ஆய்வு மையம், பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மற்றும் டிஆா்டிஓவின் பிற ஆய்வகங்கள் ஒன்றிணைந்து வடிவமைத்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.